தாய், மகள் திருமணத்தை மீறிய உறவு - ஆத்திரத்தில் மருமகன் செய்த வெறிச்செயல்!
மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். இவர்களின் மகள் அனிதா (23). இவருக்கும் இவரது உறவினரான அபிமன்யுவிற்கும் (33) என்பவருக்கும் சில வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் இருவருக்கும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் தனியாக மூலைக்கரைப்பட்டியை அடுத்த கல்லத்தி கிராமத்தில் வசித்து வந்தனர்.
திருமணத்திற்கு முன்பு அனிதாவுக்கம், மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த விஷயத்தை மறைத்த பெற்றோர்கள் அனிதாவை அபிமன்யுவிற்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணமான பிறகும் அனிதாவிற்கு அந்த நபருடன் தொடர்பு தொடர்ந்து வந்துள்ளது. இதையறிந்த கணவர் அபிமன்யுவையும், மனைவியைக் கண்டித்திருக்கிறார். கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு அனிதா, தன் குழந்தைகளை விட்டுவிட்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இதனையடுத்து, அனிதாவின் தாய் ராஜலட்சுமிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. வேலாயுதம் தன் மனைவியின் போக்கைக் கண்டித்துள்ளார். ஆனாலும், ராஜலட்சுமி, தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.
இந்நிலையில், கடந்த வாரம் தன் மனைவியை மீண்டும் குடும்பம் நடத்துவதற்கு அழைப்பதற்காக மூலைக்கரைப்பட்டி சென்ற அபிமன்யு, அவரை தன் வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால், அனிதா வர மறுத்துவிட்டார். இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ராஜலட்சுமி தனது மருமகனைத் தாக்கியுள்ளார்.
இதனால், அபிமன்யு கடந்த 15ம் தேதியன்று நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வர மறுப்பதாகவும், மாமியார் தன்னை தாக்கியதாகவும் அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் புகார் அளித்தார்.
நேற்றிரவு மீண்டும் அபிமன்யு, தன் மனைவியை வீட்டிற்கு வரும்படி கூப்பிட்டுள்ளார். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜலட்சுமி, தன் மருமகனைக் கண்டபடி திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமான அபிமன்யு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜலட்சுமியை வெட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தில் பக்கத்துவீட்டைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் தடுக்க முயற்சி செய்தார். அவருக்கும் வெட்டு விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ராஜலட்சுமி ரத்தம் சொட்ட, சொட்ட சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜலட்சுமி உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அபிமன்யுவை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.