தாய்க்கும், மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது!
சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் பாஜக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்தவர். இவர் மீது பெண் ஒருவர் சமீபத்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில் வழக்கறிஞர் பார்த்தசாரதி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதுகுறித்து தான் ஏற்கனவே புகார் அளித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்திருந்துள்ளார். தற்போது மீண்டும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.
அதோடு இல்லாமல் என் மகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று புகாரில் கூறியிருந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
பார்த்தசாரதி மீது புகார் அளித்த பெண்ணின் மகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனால், போலீசார் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல், ஆபாசமாகத் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பார்த்தசாரதி தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.