உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி… கொட்டும் மழையில் நனைந்தபடியே பணியாற்றிய உதவி கமிஷனர்! குவியும் பாராட்டு
கொட்டும் மழையில் நனைந்தபடியே உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி டிராபிக்கை சரி செய்ததை சமூகவலைத்தளத்தில் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆவடி ஜேபி எஸ்டேட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை வருகை தந்தார். இதனால், கூட்டம் அதிகமானதால், ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது, திடீரென அங்கு மழை விடாமல் பெய்தது. மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதால் வாகனங்கள் எதிரும் புதிருமாக சென்றன. விபத்தை தடுக்க கனமழையும் பொருட்படுத்தாமல் சத்தியமூர்த்தி மழையில் நனைந்தபடியே டிராஃபிக்கை சரி செய்தார்.
இதைக்கண்டு நெகிழ்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் சிலர் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தியின் அயராத பணியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ட்ராபிக்கை சரி செய்யும் போது சத்தியமூர்த்தியின் செல்போன் சேதமடைந்ததோடு அவரது கைக்கடிகாரம் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.
