கரும்பு ஜுஸ் இயந்திரத்தில் திடீரென சிக்கிய துப்பட்டா - கழுத்து நெரிக்கப்பட்டு இளம்பெண் பரிதாப பலி!
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் கரும்பு ஜுஸ் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி கழுத்தை நெரித்ததில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி இளவரசி.
இவர்கள் மணச்சநல்லூர் கடை வீதியில் கரும்பு ஜுஸ் கடை வைத்து நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று இளவரசி வாடிக்கையாளருக்கு கரும்பு ஜுஸ் பிழிந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் போட்டிருந்த துப்பட்டா, கரும்பு அரவை இயந்திரத்தில் சிக்கிக்கொண்டது. இதில் அவரது கழுத்து நெரிக்கப்பட்டதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு இளவரசியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
உடனே, விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரும்பு ஜுஸ் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.