எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு நீட் தேர்வுக் கட்டாயமே! மாணிக் தாகூர் எம்.பி. பேட்டி
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து ஆலோசனைக் கூட்டம், எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர் கட்டோச்சி தலைமையில் இன்று காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், விருதுநகர் எம்.பி. மாணிக் தாகூர், தேனி எம்.பி. ரவீந்திரநாத் உள்ளிட்ட 17 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை மதுரையில் சந்தித்த எம்.பி. மாணிக் தாகூர் கூறுகையில், "ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இன்று, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடப்பு ஆண்டில் நடைபெற இருக்கிறது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணிகள் 2023 ல் துவங்கி 2026 ல் முடிவடையும் என இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 50 மாணவர்கள் செப்டெம்பரில் நீட் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சிவகங்கை அல்லது தேனி மருத்துவக் கல்லூரிகளில் தனி வகுப்புகள் ஆரம்பிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்த முடிவை தமிழக முதலமைச்சர் எடுப்பார் எனவும் சுகாதாரத் துறைச் செயலாளர் தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் ஜப்பான் நிதி நிறுவனத்தின் 1627 கோடி ரூபாய் பங்களிப்புடன், மொத்தம் 1978 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் துவங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கட்டிடத்திற்கான முழு வடிவமைப்பையும் ஜப்பான் நிறுவனம் தந்த பிறகு, பணிகள் 2023 ல் துவங்கி 2026 ல் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மத்திய அரசின் ஒரு ஆராய்ச்சி நிறுவனம். இதன் மாணவர் சேர்க்கை மத்திய அரசே முடிவு செய்யும் என்பதால் இன்றைய சூழலில் எய்ம்ஸில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமே.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் 180 பேரும், இதர அலுவலக ஊழியர்கள் 130 பேரும் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது" என மாணிக் தாகூர் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறினார்.