‘படித்ததில் பிடித்தது’ - காமராஜரைப் பற்றி ஒரு சிறு நினைவலை
தமிழக அரசியல் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் அவர் கிங் மேக்கராகத் திகழ்ந்தார்.
ஒருமுறை பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்தபோது காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சர். அப்போது காமராஜர் அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித் தொகை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சியில்தான்.
காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை கொண்டாடியது கிடையாது. அந்த நாட்களில் அவர் சொந்த ஊருக்குப் போக மாட்டாராம்.
காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான் சாப்பாடாம். குழம்பு காரமில்லாமல் இருந்தால்தான் அவருக்கு பிடிக்குமாம்.
இரவில் ஒரு கப் பால், இரண்டு இட்லி தான் சாப்பிடுவாராம்.அதுவும் காஞ்சீபுரம் இட்லி என்றால் அவருக்கு ரொம்ப விருப்பமாம்.
காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில்தான் ஆரம்பிக்கப்பட்டது.
காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும் எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம், `ஆகட்டும் பார்க்கலாம்’ என்று சிறுவார்த்தைதான் அவரிடமிருந்து வெளிப்படுமாம்.
காமராஜர் விருது நகரிலிருந்து சென்னைக்கு கொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு டிரங்குப் பெட்டி மட்டும்தான்.
காமராஜரின் சகோதரி மகன் 1962-ல் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால், காமராஜர் `மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க’ என அனுப்பிவைத்து விட்டாராம்.
பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்-ல் சேர்ந்தார். 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின் உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில் காமராஜரும் கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி கொடுத்த மாமனிதர் காமராஜர், காலமெல்லாம் கதர் அணிந்து மக்கள் பணி ஆற்றியவர்.
கடந்த 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்தநாளில் மறைந்தார்.
இவரது மறைவுக்கு பிறகு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி காமராஜரை கவுரவித்தது.