ரூ.1 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி! மேல்முறையீடு செய்யவிருக்கும் நடிகர் விஜய்
கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டனிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். அப்போது, அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை.
இதனையடுத்து, ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி செலுத்துமாறு வணிக வரித்துறையினர் உத்தரவிட்டனர். நுழைவு வரி அதிகமாக இருந்ததால், வரியை குறைக்கக் கோரி நடிகர் விஜய் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர்கள் முறையாக வரி செலுத்த வேண்டுமெனவும் வரி என்பது பங்களிப்பு அது நன்கொடையல்ல, ரியல் ஹீரோவாக இருங்கள் எனவும் கருத்து தெரிவித்திருந்தார். வரி நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய முதுகெலும்பு என கருத்து தெரிவித்த நீதிபதி, வரியை 2 வாரத்தில் கட்டச் சொல்லியும், வழக்குத் தொடர்ந்ததற்காக ரூ.1 லட்சம் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து நடிகர் விஜய்யின் வழக்கறிஞர் எஸ்.குமரேசன்கூறியதாவது -
நீதிபதி ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து அபராதமும் விதித்திருக்கிறார்.
தீர்ப்பில் எங்களுக்கு இருக்கும் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருக்கிறோம்.
இந்த விவகாரத்தில் வரி ஏய்ப்பே இல்லை. வரி செலுத்த தயார். வருத்தமளிக்கும் விதமான தீர்ப்பை எதிர்த்து நிச்சயம் மேல்முறையீடு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.