அட இது நல்லா இருக்கே... ஒரு வாரம் வேலை செஞ்சா 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் - வித்தியாசமாக அறிவித்த பனியன் கம்பெனி

tamilnadu-samugam
By Nandhini Jul 15, 2021 09:39 AM GMT
Report

கொரோனா ஊரடங்கால் திருப்பூரில் கடந்த மே மாதம் முதல் பனியன் நிறுவனங்கள் இயங்கவில்லை.

இதனால், அந்த கம்பெனியில் வேலை செய்த வெளிமாவட்டம், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். கொரோனா குறைந்து வருவதால் தற்போது, தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.

இருந்தாலும், ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் முழுமையாக திரும்பி வரவில்லை. இதனால், பனியன் நிறுவனங்கள் சிலவற்றில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, திருப்பூர் வாவிபாளையம் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன பவர் டேபிள் கான்ட்ராக்டர்கள் வித்தியாசமான விளம்பரம் ஒன்றை அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், ஓவர்லாக், பேட்லாக் தையல் இயந்திர டைலர்கள் ஒரு வாரம் முழுமையாக வேலை செய்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என எழுதி தொலைபேசி எண்ணையும் இணைத்து விளம்பரமாக மின் கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர்.

இது குறித்து, கான்ட்ராக்டர்கள் கூறியதாவது -

பெட்ரோல் விலை உயர்வால் சிரமப்படும் தொழிலாளர்களுக்கு அதனை இலவசமாக கொடுக்கலாம் என முடிவெடுத்தோம்.

அதன்படி, இந்த விளம்பரத்தை மின் கம்பங்களில் கட்டி வைத்தோம். இதைப் பார்த்த ஏராளமானோர் போன் செய்து நிறுவனத்தில் வேலை செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர்.

இதனால், தேவையான பணியாளர்கள் கிடைத்துள்ளனர். சிலர் இந்த விளம்பரத்தை கிண்டல் செய்தனர். சிலர் மிரட்டல் விடுத்தனர். தொழிலாளர்கள் தேவைக்காக மட்டுமே விளம்பரம் செய்ததோம். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

இவ்வாறு அவர்கள் பேசினர். 

அட இது நல்லா இருக்கே... ஒரு வாரம் வேலை செஞ்சா 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் - வித்தியாசமாக அறிவித்த பனியன் கம்பெனி | Tamilnadu Samugam