“இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை” – மத்திய அரசு விரைந்து பதிலளிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் உள்ளிட்ட 65 பேர், தங்களை இலங்கை அகதியாக கருதாமல், தாயகம் திரும்பியவர்களாகக் கருதி இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் 2009ம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான வழக்கை உயர்நீதிமன்றம் விசாரணை செய்தது. அந்த விசாரணையில், மனுதாரர்கள் இந்திய குடியுரிமை கேட்டு புதிதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சியர்கள் தாமதப்படுத்தாமல் விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு 16 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. இதனால், வெளியுறவு துறை செயலர் ஹர்ஷவர்தன் ஷெர்ங்ளா, உள்துறை செயலர் அஜய் பல்லா, திருச்சி ஆட்சியர் சிவராசு ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்பிரமணியம் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் முன்பு வந்தது. தமிழக அரசு சார்பில் மனுதாரர்கள் இந்திய குடியுரிமை கேட்டு அளித்த விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஹென்றிடிபேன், ஆர்.கருணாநிதி வாதிட்டிட்டார்கள்.
பின்னர் நீதிபதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அனுப்பிய விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்து மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும், மீறி தவறினால் மத்திய அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
