ஆச்சரியமா இருக்கே... நிஜத்தில் ஒரு கும்பகர்ணன் – வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் வினோத மனிதன்
ராமாயணத்தில் வரும் கும்பகர்ணனின் கதையில், ஆறு மாதம் சாப்பிடுவான். அடுத்த ஆறு மாதத்திற்கு தூங்குவான் என்று படித்திருக்கிறோம். ஆனால் நிஜமாகவே அந்த கும்பகர்ணனுக்கே ஒரு அண்ணன் இருக்கிறார். 65 நாட்கள் மட்டுமே விழித்திருக்கிறார். 300 நாட்கள் தூக்கத்தில் இருக்கிறார். இப்படி ஒரு விநோத நோயினால் 23 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் புர்காராம்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் புர்காராம் (42). இவர் பத்வா கிராமத்தில் பல சரக்கு கடை வைத்துள்ளார்.
இவர் மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்வாராம். மிச்ச 25 நாட்களும் வீட்டிலேயே தூங்கிக் கொண்டிருக்கிறார். தூக்கத்திலேயே இருக்கும் கணவருக்கு மனைவிதான் சாப்பாடு ஊட்டி வருகிறார்.
கடந்த 23 ஆண்டுகளாக இதே நிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது. எப்போதும் கணவன் தூங்கிக்கொண்டே இருப்பதால், அவரை கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டரிடம் அழைத்து சென்று காட்டியிருக்கிறார் மனைவி. அப்போதுதான் தெரிந்தது, அவருக்கு ‘ஆக்சிஸ் ஹைப்பர் சோமியா’ Axis Hypersomnia என்றும் விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த தூக்க நோயினை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துவிட்டதால், வருடத்தில் 300 நாட்கள் தூங்கியே கழிக்கிறார் புர்காராம். மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வியாபாரம் செய்து சம்பாதிப்பதால் குடும்பம் வருமானத்திற்கு வழியில்லாமல் அவரது குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறது.