பதவியேற்க சென்னை வரும் அண்ணாமலைக்கு பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
பாஜகவின் மாநில தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தேர்தலுக்கு முன் தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் அண்ணாமலை. அவருக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், குறுகிய நாட்களிலேயே அவர் மாநில தலைவர் என்ற பதவியை அடைந்திருக்கிறார். வரும் 16ம் தேதி அவர் சென்னையில் பாஜக புதிய மாநில தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். இதற்காக, இரண்டு நாள் பயணமாக கோவையிலிருந்து யாத்திரையாக சென்னை வருகிறார்.
கோவையில் வ.உ.சி மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் குவிந்து மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து அவரை வழியனுப்பி வைத்துள்ளனர். முன்னதாக, கோனியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அண்ணாமலை அங்கிருந்து வ.உ.சி மைதானம் வந்து தொண்டர்களின் மரியாதையை பெற்றுகொண்டார்.
கோவையில் இருந்து முதலில் கரூர் செல்லும் அண்ணாமலை, நாளை சென்னை வருகிறார். அவர் செல்லும் வழியெல்லாம் பல இடங்களில் மலர் தூவி வரவேற்பு அளிக்க பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.