நீட் தேர்வின் ஆய்வறிக்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது!
மருத்துவ படிப்புக்காக நடத்தப்படும் நீட் தேர்வால் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கனவு என்பது பாழாய் போகிறது. இதனால், இத்தேர்வுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதன்படியே, ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகளில் திமுக அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது. நீட் தேர்வை எதிர்ப்பது ஏன் என்பதற்கான போதிய ஆதாரங்கள் அரசுக்கு தேவை. அதனால், தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தாக்கத்தை ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நீட் தேர்வை பற்றி கருத்து கேட்ட ஏ.கே.ராஜன் குழு, அதனை ஒருங்கிணைத்து அறிக்கையை தயார் செய்தது. ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து பாஜக வழக்கு தொடர்ந்தது.
இதனால், அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதமானது. நேற்று பாஜகவின் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ஏ.கே.ராஜன் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. அந்த அறிக்கையில் அடிப்படையிலேயே தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறது.