தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார் நளினியின் தாயார் பத்மா!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் அவரது மனைவி நளினி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் மாதம் ஒருமுறை சந்தித்துக்கொள்ள சிறை நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. அதனையடுத்து, ஆண்கள் சிறையில் இருக்கும் முருகனும், பெண்கள் தனிச் சிறையில் இருக்கும் நளினியும் மாதம் ஒருமுறை சந்தித்து பேசி வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளனர். வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் வாட்ஸ்அப் காலில் பேச அனுமதிக்கவேண்டும் என்று நளினி, முருகன் இருவரும் கோரியபோது சிறை நிர்வாகம் அதற்கு அனுமதி மறுத்துவிட்டது. இதனையடுத்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் நளினி.
அந்த வழக்கில் நளினி வெற்றி அடைந்தார். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களுடன் குறிப்பிட்ட நேரத்தில் வாட்ஸ்அப் காலில் பேச அனுமதி அளித்தது நீதிமன்றம். இந்நிலையில், கணவர் முருகனுக்கும் தனக்கும் தொடர் விடுப்பு வழங்கக்கோரி முதல்வருக்கு மனு கொடுத்தார் நளினி . ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற பிரிவுக்கு அவர் இந்த மனுவினை அளித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கையும் வைக்க உள்ளார் நளினியின் தாயார் பத்மா.
இது குறித்து முருகன், நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி நேற்று இருவரையும் மத்திய சிறையில் சந்தித்தார். அதற்கு பின்னர், அவர் செய்தியாளரிடம் பேசுகையில், நளினியின் தாயார் பத்மா இந்த வாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து முருகன் மற்றும் நளினியை தொடர்பில் விடுவிக்கக்கோரி கோரி மனு கொடுக்க உள்ளார் என்றார்.