திடீரென மின்னல் தாக்கி 68 பேர் பலி : உயிரிழந்த குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த 2 நாட்களில் மின்னல் தாக்கி 68 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். மின்னல் தாக்கியதால் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகையையும் அறிவித்துள்ளார். இது குறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
‘நாட்டின் சில பகுதிகளில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து துயருற்றேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.