2 நாட்களாக பிணத்துக்கு சிகிச்சை அளித்து பணம் கறந்த டாக்டர் கைது - அதிர்ச்சி சம்பவம்!

tamilnadu-samugam
By Nandhini Jul 12, 2021 12:26 PM GMT
Report

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் 60 வயது கொண்ட பெண் ஒருவர் உடல்நல பாதித்து ஆதார் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அந்த பெண்ணிற்கு டாக்டர் யோகேஷ் என்பவர் சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்து விட்டார். ஆனால், இந்த விஷயத்தை அவரது குடும்பத்தினரிடம் டாக்டர் தெரிவிக்கவில்லை.

மேலும் 2 நாட்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறி அதற்கான கட்டணத்தை பெற்றிருக்கிறார். பின்னர் 10-ந் தேதி அந்த பெண் உயிரிழந்ததாக கூறி உடலை அவரது மகனிடம் ஒப்படைத்துள்ளார். உடலை பெற்ற குடும்பத்தினர் இறுதி சடங்கையும் நடத்தி முடித்துவிட்டனர்.

இதனையடுத்து, மகன் இறப்பு சான்று பெற மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். சான்றிதழில் அப்பெண் 8-ம் தேதியே உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் அந்தப் பெண்ணின் மகன் அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி விசாரிக்க டாக்டர் யோகேசிடம் சென்று அவரிடம் இது குறித்து கேள்வி கேட்டார். அவர் சரிவர பதிலளிக்கவில்லை. சந்தேகம் அடைந்த மகன், இது குறித்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.

இந்த புகாரை போலீசார் பதிவு செய்தனர். அரசு மருத்துவமனையின் மருத்துவ வாரியத்திற்கு அனுப்பி விசாரித்தனர். மருத்துவ வாரியத்தினர் நடத்திய விசாரணையில், முரண்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கூடுதல் கட்டணம் பெறப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதனால், 2 நாட்களாக பிணத்துக்கு சிகிச்சை அளித்து பணத்தை கறந்ததாக போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, டாக்டர் யோகேசை போலீசார் கைது செய்தனர். 

2 நாட்களாக பிணத்துக்கு சிகிச்சை அளித்து பணம் கறந்த டாக்டர் கைது - அதிர்ச்சி சம்பவம்! | Tamilnadu Samugam