மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு பாஜக உறுதுணையாக இருக்கும்- வி.பி.துரைசாமி உறுதி!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அணையை கட்டவேக் கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதற்கு மாறாக, அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது.
இந்த விவகாரம் அனைத்து கட்சிகளின் ஆலோசனைகளையும் கேட்க எண்ணிய முதல்வர் ஸ்டாலின், இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றன.
அக்கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், மேகதாது அணை பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும், பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் நியாயத்தை வலியுறுத்த வேண்டும்.
அணை கட்டுவதை தடுக்க அரசியல் ரீதியாகவும் சட்டரீதியாகவும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனையடுத்து, கூட்டத்தில் பேசிய பாஜக வி.பி.துரைசாமி, மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு பாஜக முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றார். பாஜக மட்டுமல்லாது அதிமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சி உள்ளிட்ட கட்சிகளும் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக கூட்டத்தில் உறுதியளித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.