சாவிலும் மகளை விட்டு பிரிய மனமில்லாத தாய், மகளோடு தூக்கிட்டு தற்கொலை!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் அன்பு. இவருடைய மனைவி ரேணுகா (44) இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சங்கீதா (21). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகள் புவனா (17). இவள் ஆன்லைன் வகுப்பில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில், அன்புவின் மனைவி ரேணுகா கடந்த 10 மாத காலமாக மார்பு வலி மற்றும் நெஞ்சு எரிச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் அவ்வப்போது, தனது இளைய மகள் புவனாவை அழைத்து கொண்டு மருத்துவரிடம் சென்று சிகிச்சைப் பெற்று வருவார்.
இந்நிலையில் நேற்று காலை தனது கணவர் வேலைக்கு சென்றதும், வீட்டில் ஜாக்கெட் துணிகளை தைத்து கொண்டிருந்தார். அப்போது, மதிய உணவிற்காக அன்பு வீட்டிற்கு வந்தார்.
முன்கதவு உள் தாழிட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. அன்புவின் அண்ணன் மகன் கோபி ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தார்.
ஜன்னல் வழியே எட்டி பார்த்த கோபி அதிர்ச்சி அடைந்தார். மின் விசிறியில் மகளும், தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அலறினார்.
உடனே கோபியும், அன்பும் சேர்ந்து முன்கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது மனைவி ரேணுகாவும், இளைய மகள் புவனாவும் ஒரே கம்பியில் ஒரே நேரத்தில் தூக்கில் தொங்கியதை கண்டு அன்பு அழுது கதறினார்.
இவர்கள் அலறிய சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். தாயும், மகளையும் தூக்கிலிருந்து இறக்கி வைத்து விட்டு விஷ்ணு காஞ்சி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே, தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கணவர் அன்பு மற்றும் சுற்று வட்டாரத்தினரிடம் விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட ரேணுகா எங்கே சென்றாலும் இளைய மகள் புவனாவின் கையை பிடித்து அழைத்து கொண்டு செல்வார்.
இந்நிலையில் தன்னுடைய சாவிலும் இளைய மகள் புவனாவை தவிக்க விடாமல் ஒரே நேரத்தில் தனது மகளையும் அழைத்து சென்றது அப்பகுதி மக்கிடையே பெரும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.