பேரறிவாளன் தனியார் மருத்துவமனையில் அனுமதி!
பரோலில் வெளியில் வந்த பேரறிவாளன் திடீரென உடல்நலக் குறைவால் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் தண்டனையை அனுபவித்துவந்த பேரறிவாளன், பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு சிறையில் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என்பதால் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்க கோரி பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, கடந்த மே மாதம் 28ம் தேதி பேரறிவாளனுக்கு 30 நாட்களுக்கு பரோல் வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர், புழல் சிறையிலிருந்து திருப்பத்தூரில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து, அந்த வீட்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்கக்கோரி அவரது தாய் அற்புதம்மாள் முதல்வரிடம் மீண்டும் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து, பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
பரோல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பேரறிவாளன் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக தொற்று, முடக்குவாதம், வயிற்று கோளாறு என தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.