கடித்த பாம்பை உயிருடன் கையில் பிடித்து மருத்துவமனைக்கு வந்த சகோதரர்கள் - அலறி அடித்துக் கொண்டு ஓடின பொதுமக்கள்!
தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கடித்த பாம்பை உயிருடன் கையில் பிடித்து வந்த சகோதரர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (31), கோபால் (23). இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள். இவர்கள் அதே பகுதியில் கலாசு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள். இருவரும் நேற்று வழக்கம்போல சந்தை பேட்டையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சாக்குப் பைகளை லாரி ஒன்றில் லோடு ஏற்றி வந்தார்கள்.
அப்போது சாக்கு பையில் இருந்த 5-1/2 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு கோபாலின் கைகளை கடித்து விட்டது.
இதைப் பார்த்த அர்ஜூனன் பாம்பை விரட்டிச் சென்று அடிக்க முயற்சி செய்தார். அப்போது, அவரையும் அந்த பாம்பு கடித்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும், பாம்பை அடித்து லேசான காயத்துடன் உயிரோடு கையில் பிடித்தபடி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர்.
பாம்பை கையில் பிடித்தபடி அரசு மருத்துவமனைக்கு வந்த இருவரையும் பார்த்து பொதுமக்களும், சக நோயாளிகளும் அலறி அடித்து ஓடினார்கள்.
இதனையடுத்து, இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். கடித்த பாம்பை உயிருடன் கையில் பிடித்து மருத்துவமனைக்கு சகோதரர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.