முதுகெலும்பு நரம்புகள் சிதைவடைந்த 6 மாத குழந்தை - உதவி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை!
கோவையில் எஸ்.எம்.ஏ நோயால் பாதித்த தங்களது 6 மாத குழந்தையின் சிகிச்சைக்கு உதவி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் – ரோமிலா தம்பதியினர்.
இவர்களது 6 மாத ஆண் குழந்தை ஜேசன். குழந்தைக்கு, கால்கள் திடீரென செயலிழந்து போனது. இதனால், பெற்றோர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையை குழந்தையை அனுமதித்தனர்.
அங்கு குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், எஸ்எம்ஏ டைப் 1 என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, குழந்தையின் முதுகெலும்பில் உள்ள நரம்புகள் சிதைவடைந்ததால், கை – கால்கள் அசைக்க முடியாமல் போனதாகவும், இந்த குறைபாட்டை போக்க 2 வயதிற்குள் குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எலெக்ட்ரீசியன் வேலைக்கு சென்று, குடும்பத்தை நடத்தி வரும் தினேஷ்குமார் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, நேற்று குழந்தையுடன் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்த தம்பதியினர், தங்களது குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான ரூ.16 கோடி நிதியை வழங்க உதவி செய்யுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கும் அவர்கள் மனு அனுப்பி வைத்துள்ளனர்.