தன் உயிரை கொடுத்து 5 வயது மகனை காப்பாற்றிய தந்தை! சோகத்தில் மூழ்கிய கிராமம்
ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் திருமுருகன். இவரது 5 வயது மகன் வீட்டுக்கு அருகே தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த மின்கம்பியை அவன் தொட்டத்தில் மின்சாரம் தாக்கி அலறித் துடித்தான்.
இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த திருமுருகன் குழந்தையை காப்பாற்றும் நோக்கில், சிறுவனை தள்ளி விட்டிருக்கிறார். சிறுவன் சில அடி தூரம் சென்று விழுந்தான்.
மின்சார கம்பி திருமுருகன் மீது விழுந்து அவர் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து திருமுருகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே திருமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி உயிர் தப்பிய திருமுருகனின் மகன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து திருமுருகனின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை இழந்த திருமுருகனின் மரணத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.