தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு சம்பவம் - 102 போலீசாருக்கு சம்மன்!

tamilnadu-samugam
By Nandhini Jul 05, 2021 09:18 AM GMT
Report

2018ம் ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, அந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் தேசிய அளவில் பற்றி எரிந்தது. நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இது குறித்து, ஏற்கெனவே 27 கட்ட விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது. ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த மே மாதம் வழங்கினார். ஆணையத்தின் விசாரணை 2 மாதங்களுக்கு பின்னர் இன்று மீண்டும் தொடங்குகிறது.

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை விசாரணை நடத்த இருக்கிறார்.

ஆணையம் சார்பில் இதுவரை மொத்தம் 1,052 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 719 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்திருக்கிறார்கள்.

இதுவரை மொத்தம் 1,126 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று தொடங்கும் விசாரணையில் ஆஜராகுமாறு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த அன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 102 போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.

அவர்களிடம் விசாரணை நடத்தி சாட்சியங்கள் பதிவு செய்யப்பட இருக்கின்றன. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு சம்பவம் - 102 போலீசாருக்கு சம்மன்! | Tamilnadu Samugam