இறந்ததாக கூறப்பட்ட குழந்தையை புதைக்க செல்லும் போது துடித்த இதயம் - பெற்றோர்கள் அதிர்ச்சி!
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிளவேல்ராஜா. இவருடைய மனைவி ஆரோக்யமேரி. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆரோக்யமேரிக்கு நேற்று இரவு குழந்தை பிறந்தது. இக்குழந்தை ஆரோக்யமேரிக்கு மூன்றாவது குழந்தையாகும். ஆறுமாத குறைப்பிரசவத்தில் இக்குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இக்குழந்தை இறந்து விட்டதாக கூறி மருத்துவமனை நிர்வாகம் தரப்பு இறப்பு சான்றிதழுடன் குழந்தையின் உடலையும் பெற்றோர்களிடம் ஒப்படைத்து விட்டது. சான்றிதழுடன் குழந்தையை மயானத்திற்கு கொண்டு சென்று புதைப்பதற்காக பெற்றோர்களும், குடும்பத்தினரும் எடுத்துச் சென்றனர்.
அப்போது, தூக்கிச் சென்ற குழந்தைக்கு இதயத்துடிப்பு இருந்தது. இதைக் கண்டதும் பெற்றோர்களும், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல், குழந்தையை பெற்றோரிடம் கொடுக்கும்போது, வாளியில் போட்டு கொடுத்ததாக மருத்துவமனை நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டினர்.
பல மணி நேரமாக மூடப்பட்டிருந்த வாளியில் அடைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு இதயத்துடிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. தற்பொழுது, மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் மருத்துவமனையின் டீன் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், அந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துள்ளது.