சேலைக் கட்டி மணமகள் கெட்டப்பில் வந்த மாப்பிள்ளை - சுவாரஸ்யமான அதிசய திருமணம்!
மணமகள் கோலத்தில் ஆணும், மணமகன் கோலத்தில் பெண்ணும் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள செர்லோபள்ளி கிராமத்தில் இந்த விநோத திருமணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், மர்காபுரம் மண்டலம், தரிமடுகு, குரிச்செடு மண்டலம், தேஷினேனி பல்லி, அர்த்தவீடு மண்டலம், மாவுட்டூர், கம்பம் மண்டலம், ஜங்கங்குண்ட்லா ஆகிய கிராமங்களில், குலதெய்வ முறைப்படி நிச்சயம் செய்த தம்பதியினர் திருமண நாளில் மணமகன், மணமகள் கோலத்திலும் மணமகள் மணமகன் கோலத்திலும் உடை அணிந்து வந்து, குலதெய்வ கோவில் முன்பாக திருமணம் செய்து கொள்வது சடங்காகவும், வழக்கமாகவும் வைத்துள்ளனர்.
இந்த சடங்கு, பாரம்பரிய முறைப்படி பல்வேறு ஆண்டுகளாக அந்த கிராம மக்கள் திருமணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக மணமகன் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் திருமணத்தன்று முறைப்படி பெண் வேடமிட்டுதான் தாலி கட்ட வேண்டுமாம்.
நம் நாட்டில் எவ்வளவு நாகரிகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த கிராமங்களில் இதுபோன்ற திருமணம் நடப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது, பெத்த அறவேடு மண்டலம் செர்லோபள்ளி கிராமத்தில் நடைபெற்ற இத்திருமணம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.