மனைவியை துண்டு துண்டாக வெட்டி உடலை சூட்கேசில் வைத்து எரித்த கொடூர கணவன்!
கொடூரச் சம்பவம் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து விட்டு, சடலத்தை சூட்கேசில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவின் திருப்பதியில் நடந்துள்ளது.
திருப்பதியில் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள வனப்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும், உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அங்கு கைப்பற்றப்பட்ட தலைமுடியைக் கொண்டு, அதனை பெண் என உறுதிப்படுத்திய போலிசார், அந்தப் பகுதியில் மாயமான பெண்களின் விவரங்களை சேகரித்தனர்.
அதில், அலிபிரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த புவனேஸ்வரி (27) கடந்த 2 நாட்களுக்கு முன் மாயமானது தெரியவந்தது. இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ச்சி செய்தனர்.
அப்போது, ஸ்ரீகாந்த் என்பவர் தனது மனைவி புவனேஸ்வரியை வீட்டில் வைத்து கொலை செய்துவிட்டு, சடலத்தை சூட்கேசில் வைத்து எடுத்து வந்து கொளுத்தியது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ஸ்ரீகாந்த் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால், அவருக்கும் புவனேஸ்வரிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்த் புவனேஸ்வரியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ஸ்ரீகாந்தையும், அவருக்கு உதவியாக இருந்த டாக்சி ஓட்டுனரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.