பச்சிளம் குழந்தை ரூ.5 லட்சத்திற்கு விற்ற கும்பல் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

tamilnadu-samugam
By Nandhini Jun 30, 2021 12:05 PM GMT
Report

வந்தவாசியைச் சேர்ந்தவர் பவானி (27). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் (29) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகியுள்ளது. இதனையடுத்து, பவானி கர்ப்பமானார்.

கடந்த ஜனவரி 16ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பவானிக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்துள்ளது.

இதனால், குழந்தையை யாரிடமாவது கொடுத்து விடு.. நாம் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று பவானியிடம் சரத்குமார் கூறியுள்ளார். இதற்கு பவானியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பிறந்த குழந்தையை நெருங்கிய உறவினரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்படி கடந்த 3 மாதத்திற்கு முன்பாக நெருங்கிய உறவினருக்கு குழந்தையை கொடுப்பதாக பவானியை நம்ப வைத்து சரத்குமார் குழந்தையை எடுத்துச் சென்றிருக்கிறார். அதன்பின்னர், வெகு நாட்களாகியும் பவானியைச் சந்திக்க சரத்குமார் வரவில்லை.

இதனையடுத்து, சென்னை திருப்போரூரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருப்பதாக பவானிக்கு தகவல் கிடைத்தது. இந்த செய்தியைக் கேட்டதும் பவானி அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக பவானி வந்தவாசி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சரத்குமார் குழந்தையை வந்தவாசியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் மூலம் சென்னையைச் சேர்ந்த ஜோதி, கலைவாணி, அமுல், முனியம்மாள் ஆகியோரிடம் ரூ.3.60 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் ஈரோடு பகுதியைச் சேர்ந்த நதியா, நந்தினி, ஜானகி, ஆகியோரிடம் 5 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்பனை செய்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் பவானியின் கணவர் சரத்குமார், குழந்தையை விற்க தரகராக செயல்பட்ட ஏழுமலை, ஈரோடு பகுதியைச் சேர்ந்த நந்தினி, ஜானகி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த சென்னையைச் சேர்ந்த ஜோதி, கலைவாணி, முனியம்மாள் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த நதியா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் குழந்தையின் தாய் பவானியும், குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனால், அவரும் கைது செய்யப்பட்டார்.

மீட்கப்பட்ட குழந்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.