இறந்தவர் என்று போலீசாரால் கூறப்பட்டவர் உயிரோடு வந்த அதிசயம்!

tamilnadu-samugam
By Nandhini Jun 30, 2021 10:43 AM GMT
Report

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சின்னகண்ணு ( 46). இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 10 மாதத்திற்கு முன்பு கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் பிழைப்பு தேடி உறவினர்களிடமும் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்.

தொடர்பு எதுவும் இல்லாததால் உறவினர்கள் சின்னகண்ணுவை காணவில்லை என பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், புலிகுத்திகிராமம் அருகே விவசாய கல்லூரி தோப்பிற்குள் ஒருவர் இறந்து கிடப்பதாக கல்லல் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே, அங்கு விரைந்து சென்ற போலீசார் அருகில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

இறந்து கிடப்பது கல்லுப்பட்டி மாதா கோவில் அருகே வசிக்கும் காணாமல் போன சின்னகண்ணு என்பது தெரியவந்தது.

இவரது உறவினர்களை அழைத்து வந்த போலீசார் இறந்து கிடந்தவரை காண்பித்து இவர் சின்னகன்னு தானே என்று கூற, உறவினர்களும் மறுத்துள்ளனர்.

இருந்தாலும் கிராமத்தினர் சிலர் மற்றும் காவல்துறை உறவினர்களை மிரட்டி இறந்து கிடப்பது சின்னகண்ணு தான் என எழுதி வாங்கியுள்ளனர்.

அதன் பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

உறவினர்களும், சின்னக்கன்னு இறப்பு குறித்து சக உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். 10 வருடமாக பிரிந்திருந்த மனைவி வளர்மதி மற்றும் குழந்தைகளும் சின்னகண்ணு இறந்த செய்தி கேட்டு கல்லுப்பட்டிக்கு வந்து சேர்ந்தனர்.

நேற்று காலை சின்னக்கன்னு உடலை வாங்க சிவகங்கை செல்ல இருந்த நிலையில் இறந்ததாக கூறப்பட்ட சின்னகன்னு தேவகோட்டையில் உயிரோடு இருப்பதாக உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, தேவகோட்டைக்குச் சென்று சின்னகண்ணுவை அழைத்து வந்தனர்.

கிராமமே சின்னகன்னு இறந்து விட்டதாக கூறியதால், சின்னகன்னு உயிரோடுதான் உள்ளார் என தெரிவிக்க வண்டியில் ஏற்றி கிராம வீதிகளில் மக்களிடம் சின்னகன்னு உயிரோடு தான் இருக்கிறார் என காண்பித்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இறந்தவர் என்று போலீசாரால் கூறப்பட்டவர் உயிரோடு வந்த அதிசயம்! | Tamilnadu Samugam