தமிழகத்தில் ஆடு மாடு போல் 7 வயது சிறுவனை ரூ.5000க்கு விற்கப்பட்ட கொடூரம்!
தமிழகத்தில் 7 வயது சிறுவன் ரூ.5,000க்கு விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், செல்லத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவன் இந்த 7 வயது சிறுவன். இச்சிறுவன் 3 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே எச்.ஹரிராஜின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான்.
ஆட்டு மந்தை வைத்திருக்கும் ஹரிராஜ், இச்சிறுவன் தன்னுடைய மகன் என்று உள்ளூர்வாசிகளிடம் கூறி, தன் வீட்டில் இருந்த 150 ஆடுகளை மேய்க்க அச்சிறுவனிடம் சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இச்சிறுவன் அழுதுக்கொண்டே இருந்துள்ளான். அப்போது, சில உள்ளூர்வாசிகள் சிறுவன் அழுவதை கவனித்தனர்.
அச்சிறுவனின் அருகில் சென்று உள்ளூர்வாசிகள் விசாரித்தனர். ஏன் தம்பி.. அழுதுக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டுள்ளனர்.
அப்போது அச்சிறுவன்... ஹரிராஜின் 10 வயது மகன் என்னை அடித்து தள்ளிவிட்டதாக கூறியுள்ளான்.
அதன் பிறகு அந்த உள்ளூர் வாசிகள் ஹரிராஜின் 10 வயது மகனை கூப்பிட்டு விசாரித்தனர்.
அப்போது அச்சிறுவன், என் அப்பா... இந்த பையனை ராமநாதபுரத்திலிருந்து ரூ.5,000-க்கு வாங்கிட்டு வந்திருக்கிறார் என்று உண்மையை கூறினான்.
இதைக் கேட்டதும் உள்ளூர்வாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனை மீட்டனர்.
பிறகு, அச்சிறுவன் குழந்தைகள் நலக் குழுமத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டான்.
ஆரம்ப விசாரணையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்ற இடைத்தரகர், ஹரிராஜுக்கு சிறுவனை பெற்றோரிடமிருந்து பெற உதவியதாகக் கூறப்படுகிறது. அவர் சிறுவனின் பெற்றோர் பற்றிய விவரங்களைக் கொடுத்தார்.
தூத்துக்குடிக்கு வந்த சிறுவனின் பெற்றோரை விசாரித்தபோது, அவர்கள் தங்கள் மகனை விற்கவில்லை என்றும், அவன் குழந்தை தொழிலாளியாக ஈடுபடுத்தப்பட்டது தெரியாது என்றும் கூறியுள்ளனர்.
மேலும், கணேசன் மூலமாக மகனுடன் தொலைபேசியில் தவறாமல் பேசிவந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து, விசாரணை நடத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.