‘வேலைக்கு போ’ என்று சொன்ன மனைவி - மறுத்த கணவனால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட துயரம்!
அருப்புக்கோட்டை, வில்லுபத்திரி பகுதியை சேர்ந்தவர் பாண்டி (33). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி திருமலைசெல்வி (26). இவர்களுக்கு திவ்யா (5), காவ்யா (4) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு பாண்டி குடும்பத்துடன், குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் வடக்கு பகுதியில் சென்று வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக வேலைக்கு செல்லாமல் பாண்டி வீட்டிலேயே இருந்துள்ளார். குடும்பம் நடத்த போதுமான பணமின்றி திருமலைச்செல்வி தவித்துள்ளார்.
இதுகுறித்து, பலமுறை பாண்டியிடம் திருமலைச் செல்வி கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால், இருவருக்குள்ளேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று பாண்டி வெளியில் சென்றால். அந்த நேரத்தில், திருமலைச்செல்வி தனது 2 மகள்களுக்கும் அரளி விதையை அரைத்து கொடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்த பாண்டி, மனைவி மற்றும் குழந்தைகள் மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மூவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தார்.
இதில், குழந்தைகள் உயிர் பிழைத்துக் கொண்டன. ஆனால், திருமலைச்செல்வி உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருமலைசெல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.