டெல்டா பிளஸ் கொரோனா பெரிய அளவில் பரவவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
உருமாற்றம் அடையும் வைரஸ்களை கண்டறிய சென்னையில் பரிசோதனை மையம் அமைக்கப்பட உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னையில் மா.பொ.சிவஞானத்தின் 116-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது - 3-வது அலைக்கு தயாராகும் விதமாக 2-வது அலையில் உருவாக்கப்பட்ட படுக்கைகளின் கட்டமைப்பு தொடர்ந்து செயல்பட உள்ளது.
பொது நோய்களுக்கு முக்கியத்துவம் அளிக்க அரசு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். உருமாற்றம் அடையும் வைரஸ்களை கண்டறிய சென்னையில் பரிசோதனை மையம் அமைப்பட உள்ளன. டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டார்கள்.
பாதித்தவர்கள் சகஜ நிலைக்கு திரும்பி விட்டதால் கட்டுப்படுத்தும் பகுதியாக மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது எடுத்த முடிவுகளை தான் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. மீண்டும் யாருக்காவது டெல்டா பிளஸ் கொரோனா ஏற்பட்டால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.