கேரளாவில் அலறிய இளம்பெண்.. ஆணியாலேயே குத்திய கொடூரம்.. நடந்தது என்ன?

tamilnadu-samugam
By Nandhini Jun 23, 2021 06:19 AM GMT
Report

கேரளா கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஸ்மயா (24). இவர் ஆயுர்வேத மருத்துவர் படிப்பு படித்து வந்தார். கடைசி வருடம் படித்து கொண்டிருக்கும்போதே கடந்த வருடம் மார்ச் மாதம் சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த எஸ்.கிரண்குமார் என்பவரை விஸ்மயாவிற்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

கிரண்குமார் மோட்டார் வாகனத் துறையில் அதிகாரியாக உள்ளார். கல்யாணத்தில் விஸ்மயாவுக்கு 100 பவுன் நகை, 1 ஏக்கர் நிலம், 1 டொயோட்டா கார் போன்றவைகளை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் தம்பதிகள் இருவரும் சந்தோஷமாகவே இருந்துள்ளனர்.

இதனையடுத்து, கொஞ்சம், கொஞ்சமாக கிரண்குமார் வரதட்சணை கேட்டு வந்துள்ளார். மேலும், பணம் வேண்டும் என்று விஸ்மயாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்த கொடுமை நாளடைவில் கொடூரமாக மாறியுள்ளது. ஆணிகளை கொண்டு மனைவியின் முகத்தில் வைத்து தாக்கி உள்ளார். கட்டைகளை எடுத்து மண்டையில் அடித்துள்ளார்.

சண்டை வரும்போதெல்லாம் எட்டி எட்டி வயிற்றிலேயே உதைத்துள்ளார்.. ஒருமுறை, மகளை பார்க்க பெற்றோர் வந்தபோது, அவர்கள் கண்முன்னாடியே விஸ்மயாவை சரமாரியாக தாக்கியிருக்கிறார் கிரண்குமார். இதை பார்த்து பதறி போன பெற்றோர், அப்போதே போலீசிடம் புகார் கொடுத்தனர்.

போலீசார் கிரணை கைது செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, அம்மா வீட்டிலேயே இருந்த விஸ்மயாவை 2 மாதத்திற்கு முன்பு சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார் கிரண்குமார்.

கணவர் திருந்தி இருப்பார் என்று தான் நம்பி விஸ்மயா வந்துள்ளார். ஆனால், மறுபடியும் குடி, உதை, அடி, என விஸ்மயாவை கொடுமைப்படுத்தியுள்ளார். நடக்கும் கொடுமையை தன் அம்மாவிடம் மட்டும் அடிக்கடி சொல்லி அழுதுள்ளார் விஸ்மயா.

இந்நிலையில், விஸ்மயா வீட்டில் மர்மமாக இறந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஸ்மயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விஸ்மயாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கிரண்குமார் மீது புகார் கொடுத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், கிரண்குமார் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை வலை வீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு கிரண்குமாரே சூரானந்த் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் மீது சட்டப்பிரிவு 304, வரதட்சனை மரணம், சட்டப்பிரிவு 408 ஏ ஆகியனவற்றின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தச் சம்பவம் கேரளாவையே உலுக்கி எடுத்துவிட்டது. காரணம், கேரளாவில் கடந்த 2016 முதல் 2020 வரை 56 வரதட்சனை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.     

கேரளாவில் அலறிய இளம்பெண்.. ஆணியாலேயே குத்திய கொடூரம்.. நடந்தது என்ன? | Tamilnadu Samugam