விக்ரம் வேதா சர்ச்சை : மன்னிப்பு கேட்குமா கூகுள்?

tamilnadu-samugam
By Nandhini Jun 23, 2021 05:18 AM GMT
Report

கடந்த 2017ம் ஆண்டு மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான படம் விக்ரம் வேதா. இப்படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. ஆனால், இப்படத்தினால் கன்னட ராஜ்குமார் ரசிகர்கள் இப்போது கொந்தளித்து கிடக்கிறார்கள். விக்ரம் வேதா படம் தொடர்பான விபரங்கள் கூகுளில் உள்ளன.

இப்படத்தில் ‘ஆப் பாயில்’ என்ற கேரக்டரில் நடித்தவரின் படத்திற்கு பதிலாக மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் படம் இடம்பெற்றுள்ளது. ராஜ்குமாரின் தோளில் ஒரு புறா அமர்ந்திருப்பது மாதிரி அப்படம் இருக்கிறது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை போலவே கன்னடத்தில் ராஜ்குமார் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அவரை கன்னட எம்.ஜி.ஆர். என்றே ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

அப்படிப்பட்டவரின் படத்தை இப்படி செய்தால் யாராவது பொறுத்துக்கொள்வார்களா? இது குறித்து, நடிகர் ரிஷப் ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், தயவுசெய்து விக்ரம் வேதா தமிழ் கூகிள் பக்கத்தில் எங்கள் டாக்டர் ராஜ்குமாரின் புகைப்படம் வேறொரு பெயரில் சேர்க்கப்பட்டுள்ளது, அதை உடனே நீக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

இதன்பின்னர் விபரம் தெரிந்து ராஜ்குமார் ரசிகர்கள் கொந்தளித்தனர். கூகுள் நிறுவனம் உடனே படத்தை நீக்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். கன்னட திரையுலகினரும் கூகுளை கண்டித்து அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.