மாற்றுத் திறனாளி தந்தையை போலீசார் தாக்கியதை கண்டித்து, செல்போன் டவரில் ஏறி இளம்பெண் போராட்டம்!

tamilnadu-samugam
By Nandhini Jun 23, 2021 05:09 AM GMT
Report

தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் அந்தோணி (50). இவர் ஒரு மாற்றுத் திறனாளி. இவர் கடந்த 18ம் தேதி தனது வீட்டில் இருந்த ரேஷன் அரிசியை, புளியரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு கொண்டு சென்றிருக்கிறார். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட புளியரை போலீசார், பிரான்சிஸ் அந்தோணியிடம் இருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

அதோடு இல்லாமல் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். போலீசார் தாக்கியத்தில் பிரான்சிஸ் அந்தோணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரான்சிஸ் அந்தோணியின் 2வது மகள் அபிதா (22), நேற்று முன்தினம் மாலை செங்கோட்டை அரசு மருத்துவமனை அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த தென்காசி மாவட்ட எஸ்.பி.கிருஷ்ணராஜ், டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மாற்றுத் திறனாளி தந்தையை போலீசார் தாக்கியதை கண்டித்து, செல்போன் டவரில் ஏறி இளம்பெண் போராட்டம்! | Tamilnadu Samugam

செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கும்படி அபிதாவிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால், இறங்க மறுத்த அபிதா முதல்வரிடம் தனது கோரிக்கையை தெரிவிக்க ஏற்பாடு செய்தால் தான் போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, அபிதாவின் பெற்றோர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த அவர், இரவு 9 மணிக்கு மேல் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். இதனால் சுமார் 5 மணி நேரமாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து, போலீசார் அபிதாவை பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.