நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் அருப்புக்கோட்டையில் பரபரப்பு!

tamilnadu-samugam
By Nandhini Jun 22, 2021 11:58 AM GMT
Report

தளபதி என ரசிகர்களால் போற்றிக் கொண்டாடப்படும் நடிகர் விஜய் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் தளபதி விஜய் நற்பணி இயக்கம் சார்பில் கொரோனா நலத்திட்ட உதவிகள், நலிவடைந்தோர்க்கும், முன் களப் பணியாளர்களுக்கும் ஆங்காங்கே, அரிசி, மளிகைப் பொருட்கள் தொகுப்பாக வழங்கப்பட்டன.

தங்கள் தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறி சுவரொட்டிகளும் ஒட்டி மக்கள் கவனத்தை ஈர்த்தனர் அவரது ரசிகர்கள்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை முழுவதும் தளபதி விஜய்யை வாழ்த்தி ஒட்டிய பிறந்த நாள் சுவரொட்டிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

குறிப்பாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1977 ல் வெற்றிப் பெற்ற தொகுதி அருப்புக்கோட்டை என்பதை சுட்டிக் காட்டும் விதமாக, " 1977 ல் மக்கள் திலகம் கண்ட அருப்புக்கோட்டை... 2026ல் மக்கள் தலைவர் காணும் அருப்புக்கோட்டை..." என்ற சுவரொட்டி அதிமுக தொண்டர்களிடமும், " இப்ப வரைக்கும் நடப்பது உங்க அண்ணாவின் ஆட்சி... 2026 ல் இனி எங்க அண்ணாவின் ஆட்சி... " என்ற சுவரொட்டி திமுக தொண்டர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஜெயலலிதா, கருணாநிதி முதல்வர்களாக இருந்த காலக் கட்டத்திலும், விஜய் குறித்த அரசியல் பிரவேச செய்திகள் தீயாய்ப் புகைந்து தமிழக அரசியலில் சூட்டைக் கிளப்பியது போல, இப்போது மு.க. ஸ்டாலின் ஆட்சி நடைபெறும் தமிழகத்திலும் திரும்பவும் புகையத் துவங்கி உள்ளது. விஜய் ரசிகர்கள் ஆசை நிறைவேறுமா? இல்லை,  ரஜினி ரசிகர்களின் நிலை ஏற்படுமா? எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் அருப்புக்கோட்டையில் பரபரப்பு! | Tamilnadu Samugam

நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் அருப்புக்கோட்டையில் பரபரப்பு! | Tamilnadu Samugam