600 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரியவகை சூல கற்கள் கண்டுபிடிப்பு!

tamilnadu-samugam
By Nandhini Jun 20, 2021 10:24 AM GMT
Report

உத்தரமேரூர் அருகே பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரியவகை சூல கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே திருப்புலிவனம் கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினரால் சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கும் நிலத்தின் எல்லையை குறிக்கும் 15ம் நூற்றாண்டை சார்ந்த அரியவகை சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் பேசியதாவது -

இந்த கற்கள் விஜயநகர மன்னர்களின் காலத்தை சார்ந்தது. சுமார் 50 செ.மீ. அகலமும் 75 செமீ உயரமும் கொண்ட ஒரு கல்லும், அதன் அருகில் 35 செ.மீ அகலமும் 70செ.மீ உயரமும் கொண்ட மற்றொரு கல்லும் இருக்கிறது. இந்த கல்லின் இடதுபக்கம் சூலச் சின்னமும் அதன்கீழ் பன்றி உருவமும் இருக்கிறது.

இது விஜய நகர மன்னர்களின் சின்னமாகும். வலது பக்கத்தில் பெரிய உருவத்தில் கழுதையும் அதன் கீழ் பெரிய புறா உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது . இது குலச்சின்னமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த கல் 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

மன்னர் காலங்களில் சிவன் கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் நிலங்களுக்கு அதன் எல்லையை குறிப்பதற்காக நான்கு திசைகளில் சூலச்சின்னம் பொறித்த கற்களை நட்டு வைப்பார்கள்.

இதற்கு சூலக்கற்கள் என்று பெயர். இவ்வூர் மக்கள் இதை இன்றும் எல்லைக்கல் என்றே அழைக்கிறார்கள். திருவிழாக்காலங்களில் இதை வழிபட்டும் வருகிறார்கள். இது குறித்து தொடர் ஆய்வில் உள்ளோம்.

கடந்த கால வரலாற்றை நிகழ்காலத்திற்கு பறைசாற்றும் இவ்வகை அரிய வரலாற்றுப் பொக்கிஷங்களை காத்திடுவது காலத்தின் கட்டாயமாகும். எனவே இதில் தமிழகத் தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

600 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரியவகை சூல கற்கள் கண்டுபிடிப்பு! | Tamilnadu Samugam

 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரியவகை சூல கற்கள் கண்டுபிடிப்பு! | Tamilnadu Samugam