பிரபல நடிகர் கொரோனாவால் உயிரிழந்தார்!

tamilnadu-samugam
By Nandhini Jun 20, 2021 09:30 AM GMT
Report

தமிழ் திரைப்பட நடிகரான போளூர் ஜெயகோவிந்தன் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், கொரோனா தொற்று பாதித்து சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர்,

அஇஅதிமுக இலக்கிய அணி இணைச் செயலாளராகவும், தலைமை கழக நட்சத்திர பேச்சாளருாகவும், திருவண்ணாமலை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். பல்வேறு தேர்தல்களில் அதிமுகவின் வெற்றிக்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார் நடிகர் ஜெயகோவிந்தனர்.

இவரது மறைவால் கட்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவிற்கு அதிமுக தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு -

அ.தி.மு.க. இலக்கிய அணி இணைச்செயலாளரும், நட்சத்திரப் பேச்சாளருமான நடிகர் போளூர் ஜெயகோவிந்தன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணொத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.

அம்மாவின் பேரன்பைப் பெற்றவரும், அ.தி.மு.க. மீதும், தொடர்ந்து கழகத் தலைமையின் மீதும் மாறாத விசுவாசம் கொண்டிருந்தவரும், ஆரம்பகால கழக உடன்பிறப்புமான நடிகர் போளூர் ஜெயகோவிந்தன் தலைமை கழக நட்சத்திரப் பேச்சாளராக, கழக கொள்கைகளையும், சாதனைகளையும் எதிர்க்கட்சியினரின் பொய் பிரசாரங்களையும் நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பட்டி தொட்டியெங்கும் எடுத்துரைத்தவர் ஆவார்.

தேர்தல் காலங்களில் இவருடைய பணிகள் பாராட்டுக்குரியவையாக அமைந்திருந்தன. நடிகர் போளூர் ஜெயகோவிந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.