சேலையில் ஊஞ்சல் ஆடியபோது விபரீதம் - கழுத்து நெறித்து சிறுவன் பரிதாப பலி!
சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன் (36). இவர் மனைவி செண்பகவல்லி (28). இவர்களுக்கு மித்ரன்(10), பிரசன்னா (6) என இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
கொரோனோ காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், சிறுவர்கள் டிவி, செல்போன் மற்றும் விளையாட்டில் அதிக நேரத்தை செலவழித்து வருகிறார்கள். இதனையடுத்து, வெங்கடேஸ்வரன் வீட்டு அருகில் உள்ள மரத்தில் சேலையில் ஊஞ்சல் கட்டி சிறுவர்கள் விளையாடி வந்துள்ளனர்.
இந்நிலையில், மித்ரனும் அங்கு விளையாடி வந்துள்ளான். வழக்கம் போல நேற்று மித்ரன் சேலையில் ஊஞ்சல் கட்டி, சுற்றி சுற்றி விளையாடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சேலை வேகமாக சுற்றியதில் சிறுவன் கழுத்தில் எதிர்பாராமல் சேலை கழுத்தை சுற்றியுள்ளது.
இதனால்,சேலை கழுத்தில் சுற்றிக்கொண்டதால் அவனால் கத்தமுடியவில்லை. இதனால், வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மித்ரன் வீட்டிற்கு வராததால் வெளியே வந்து வெங்கடேஷ்வரன் பார்த்துள்ளார். அப்போது, சிறுவன் சேலையில் மயக்க நிலையில் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து வெங்கடேஷ்வரன் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக பெற்றோர்கள் மித்ரனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுபோய் சேர்த்தனர். ஆனால், மித்ரனை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் சிறுவன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரபாண்டி காவல் நிலையப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
