துபாயில் 10 மாதமாக தாயை இழந்து பரிதவித்த குழந்தை - திருச்சியில் கண்ணீரோடு அள்ளி அணைத்த தந்தை

tamilnadu-samugam
By Nandhini Jun 18, 2021 10:45 AM GMT
Report

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் வேலன். இவருடைய மனைவி பாரதி. இவர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள்.முதல் மகன் விக்னேஷ் 13 வயது இருக்கும்போது சிறுநீரக கோளாறால் உயிரிழந்தார்.

குடும்ப வறுமையில் போராடிய பாரதி, பொருளாதாரம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 10 மாத கைக்குழந்தையுடன் துபாயில் வீட்டு வேலைக்காக சென்றார். அங்கு ஒரு மாதம் வீட்டு வேலை செய்த பாரதிக்கு கொரோனா தொற்று பாதித்தது. மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் பாரதி உயிரிழந்தார்.

தாயை இழந்த 10 மாத குழந்தை ஆதரவற்ற நிலையில் தவித்து வந்தது. இதை அறிந்த துபாய் நகர திமுக அமைப்பாளர் மீராமிதுன் அங்குள்ள இந்தியத் தூதரகத்திற்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து, தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த தகவல் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, கைக்குழந்தை தேவேஷ் என்ற பயணி ஒருவர் மூலம் நேற்று மாலை துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு குழந்தை அழைத்து வரப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் உள்ள தந்தை வேலனுக்கு தகவல் கொடுக்க்ப்பட்டு, அவர் திருச்சி விமான நிலையத்திற்கு தனது 2வது மகனுடன் வந்தார். குழந்தையை பார்த்ததும் ஆனந்த கண்ணீரில் வேலன் தனது குழந்தையை உச்சி நுகர, அள்ளி அணைத்து முத்தமிட்டார்.

இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் நெகிழ்ந்தார்கள். தமிழக அரசு உதவியுடன் குழந்தை தமிழகத்திற்கு வந்த சம்பவம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.