சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை!
டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா சென்னை விமான நிலையத்திலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூரில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக போலீசில் சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இருவர் மீது பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்பத் தகவல் சட்டம் உட்பட 9 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.
பாலியல் வழக்கு தொடர்பாக சிவசங்கர் பாபா நேற்று டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, நேற்றிரவு சிபிசிஐடி போலீசாரால் சென்னைக்கு பாபா அழைத்து வரப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.