யூடியூபர் மதனின் மனைவி கைது - போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்துள்ளனர். போலீசாரால் தேடப்பட்டு வரும் மதன் குறித்து கிருத்திகாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்தாலும் புதுப்புது தொழில் நுட்பத்தினால் அது விளையாடப்பட்டு வருகிறது. பப்ஜி விளையாடுவது எப்படி என்று லைவ் ஸ்ட்ரீமிங்கில் பணத்தை அள்ளிக் குவித்து வந்த மதன், லைவ் ஸ்ட்ரீமிங்கின் போது சிறுவர், சிறுமிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராமில் மதனை பின்பற்றும் சிறுமிகளையும் அவர் ஆபாசமாக பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பப்ஜிக்கு அடிமையான பார்வையாளர்களை தன் ரசிகர்களாக வைத்துக்கொண்டு, எதிர்ப்பவர்களை சைபர் தாக்குதல் செய்வதுதான் மதனின் பாணியாம். கோடிக்கணக்கான பணமும், ரசிகர்களும் இருப்பதால் எதிர்ப்பவர்களை குடும்பத்துடன் காணாமல் போக செய்து விடுவேன் என்று மதன் மிரட்டிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலானது.
இதனால் சென்னை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். மதன் மீது மத்திய குற்றபிரிவு சைபர் கிரைமில் மட்டும் இதுவரைக்கும் 150 க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார், மதனை தீவிரமாக தேடி வருகிறார்கள். முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மதன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருகிறது. இதனையடுத்து, மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
மதன் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால், அவரது மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.