பாம்பு கடித்தது கூட தெரியாமல் கேம் விளையாடிய சிறுவன்: மருத்துவமனைக்கு கடித்த பாம்பை கொண்டு வந்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி, கே.எம்.குண்ணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கபாலன். இவருடைய மகன் மணிகண்டன் (16). சில சிறுவர்களுடன் மணிகண்டன் சேர்ந்து கோவில் படிக்கட்டில் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது நீர் விரியன் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்து மணிகண்டனின் இடது கால் பாதத்தை கடித்துவிட்டது.
ஆனால், மணிகண்டனுக்கு பாம்பு கடித்ததே தெரியாமல் போனில் தீவிரமாக கேம் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் மணிகண்டனுக்கு பாம்பு கடித்த இடத்தில் வலிக்க ஆரம்பித்துள்ளது.
இதனையடுத்து, கேம் விளையாடியதை நிறுத்தி விட்டு காலை பார்த்தான். அப்போதுதான் அவனுக்கு தெரிந்தது தன்னை பாம்பு கடித்து விட்டது என்று. உடனே, அருகில் இருந்த நீர் விரியன் பாம்பை கையில் பிடித்து கொண்டே உறவினருடன் பைக்கிலேயே மருத்துவமனைக்கு வந்தான். உடனடியாக மருத்துவர்கள் மணிகண்டனுக்கு முதலுதவி அளித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பாம்போடு அரசு மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.