சிவசங்கர் பாபா பள்ளியிலிருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் விலகல்!
சென்னையை அடுத்து கேளம்பாக்கம் அருகே சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சிவசங்கர் பாபா மீது மாணவிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, சிவசங்கர் பாபா மீது 3 மாணவிகள் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திலிருந்து விசாரணை செய்ய, சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், சிவசங்கர் பாபா, நெஞ்சுவலி ஏற்பட்டு டேராடூனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது வக்கீல் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, சிவசங்கர் பாபா மீதான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, சிவசங்கர் பாபா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்துள்ளனர்.
டேராடூனில் உள்ள அவரிடம் விசாரிக்க சிபிசிஐடி குழு அங்கு விரைந்திருக்கிறது. இவ்விவகாரத்தால், சுஷில் ஹரி பள்ளியிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் விலகி வருகின்றனர்.
மாணவர்கள் மாற்று சான்றிதழ் வாங்கி கொண்டு வேறு பள்ளியில் சேர்ந்து வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மாற்று சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள். அத்துடன் ஆசிரியர்கள் பலர் விலகல் கடிதம் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.