130 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறு விழுந்த 4 வயது சிறுவன் - 8 மணி நேரம் போராடி உயிருடன் மீட்பு!
130 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை 8 மணி நேரம் போராடி மீட்புப்படை வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம், ஆக்ரா அருகேயுள்ள தரியாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சோட்டேலால். இவருடைய 4 வயது மகன் நேற்று காலை வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 130 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த, ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் இறங்கினர். சுமார் 8 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு நேற்று மாலை சிறுவர் உயிருடன் மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட சிறுவனுக்கு முதற்கட்டமாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. பிறகு குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அங்கு அவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சிறுவனை உயிருடன் மீட்ட பேரிடர் மீட்பு குழுவினருக்கு பல்வேறு தரப்பு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து குழந்தையின் தந்தை சோட்டேலால் கூறுகையில், மகனை உயிருடன் பார்த்ததும், நான் ரொம்ப சந்தோஷம் அடைந்தேன். நான் அதிர்ஷ்டசாலி. என் குழந்தையை உயிருடன் பார்த்துவிட்டேன் என்று உணர்ச்சிவசப்பட்டு கண்ணீருடன் பேசினார்.