பேய் ஓட்டுவதாகக் கூறி மனநலம் பாதித்த பெண்ணை சங்கிலியால் கட்டி பிரம்பால் அடித்து சாமியார் சித்ரவதை!
செம்பொன்விளை பகுதியில் மனநலம் பாதித்த பெண்ணை பேய் ஓட்டுவதாக கூறி சங்கிலியில் கட்டி வைத்து சித்திரவதை செய்த போலி சாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர் வீட்டருகே ஒரு கோயில் அமைத்து அருள் வாக்கு சொல்லி வருகிறார்.
இந்நிலையில், நேற்று அந்த கோயிலில் இளம் பெண் ஒருவரை சங்கிலியால் கட்டி, உடல் முழுவதும் பிரம்பால் அடிக்கப்பட்ட காயங்களுடன் உருண்டு புரளுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. உடனே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இத்தகவல் அறிந்த குளச்சல் டி.எஸ்.பி கணேசன், போலீசாருடன் இன்று அந்த கோயிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு ஒரு இளம் பெண் சித்திரவதைக்குள்ளப்பட்டு, உடலில் காயங்களுடன் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடேனே, இது குறித்து கோயில் சாமியாரிடம் விசாரணை நடத்தினார். சாமியாரிடம் நடத்திய விசாரணையில் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது -
அந்த பெண் சேவிளை பகுதியை சேர்ந்த அஜிதா. இவருடைய கணவர் வினோ. இவர் ராணுவ வீரர். பட்டதாரி பெண்ணான அஜிதாவை கடந்த 15-நாட்களுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கணவர் வினோ மற்றும் பெண்ணின் பெற்றோர்கள் பேய் பிடித்திருக்கலாம் என்று நினைத்து சாமியாரிடம் கொண்டு வந்துள்ளனர்.
அப்போது, அந்தப் பெண்ணின் கை கால்களை கட்டி போலி சாமியார் துரைராஜ் வீட்டில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்றனர். சாமியார் அவர்களை குடும்பத்தோடு கோயிலில் தங்க வைத்துள்ளார்.
அந்த பெண்ணை சங்கிலியில் கட்டிப்போட்டு பேய் ஓட்டுவதாக கூறி சாமி அருள் வந்தது போல் தினமும் பிரம்பால் அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெண்ணின் கணவரான ராணுவ வீரர் வினோவை போலீசார் எச்சரித்து, படுகாயத்துடன் இருந்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலி சாமியார் துரைராஜிடம் போலுசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, இந்த போலி சாமியார் மீது குளச்சல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சங்கிலியில் கட்டி போட்டு பிரம்பால் அடித்து பேய் ஓட்டுவது போன்ற செயலில் சாமியார் ஈடுபட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.