ஆம்புலன்ஸ் டயர் வெடித்து பயங்கர விபத்து - கர்ப்பிணி உட்பட 3 பேர் பரிதாப பலி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்தது.
கர்ப்பிணியுடன் அவரது உறவினர்கள் செல்வி, அம்பிகா ஆகியோர் ஆம்புலன்சில் சென்றனர். அப்போது, ஆம்புலன்ஸ் ஆலந்துரை ஏரிக்கரை அருகே வந்தபோது, திடீரென டயர் வெடித்தது. அப்போது ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது.
வேகமாக வந்த ஆம்புலன்ஸ், சாலையில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கர்ப்பிணி பெண்ணுடன் இருந்த அவரது உறவினர்கள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
கர்ப்பிணி பெண் ஆம்புலன்சில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக, அவர் மாற்று ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரும், பெண் உதவியாளரும் படுகாயத்துடன் உயிர் தப்பி இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.