நின்று போக இருந்த மகளின் திருமணம் - தந்தை செய்த செயலால் வியப்படைந்த ஊர் மக்கள்!
மகளின் திருமணம் நிற்கக்கூடாது என்பதற்காக தந்த செய்த செயல் ஊர் மக்களை வியப்படைய வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிரா. இவருக்கும், செங்கனூரைச் சேர்ந்த அகிலு என்பவருக்கும் திருமணம் கடந்த மாதம் 23-ந் தேதி நடைபெற இருந்தது.
ஆனால், கொரோனா 2வது அலை அதிகமாக பரவி வருவதாலும், ஊரடங்கு காரணமாகவும் திருமணத்தை இருவீட்டாரும் கலந்து பேசி தள்ளி வைத்துள்ளனர். இதனிடையே, மணமகளின் இல்லத்தில் எளிமையான முறையில் மணமக்களுக்கு திருமணம் நடத்துவதாக இருவீட்டாரும் முடிவு செய்தனர். மணமகள் ஊரில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள மணப்பெண்ணின் வீட்டில் தண்ணீர் புகுந்தது.
திருமணத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மீண்டும் திருமணம் தடைப்பட்டு வருகிறதே என்று மணப்பெண் ஆதிரா மன வருத்தத்தில் இருந்தார். இதைக்கண்ட ஆதிராவின் தந்தை, மகளின் மனநிலையை புரிந்து கொண்டு, திருமணத்தை குறித்த தேதியில் எப்படியாவது நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார். வீட்டில் திருமணத்தை நடத்த வேற வழியில் அவர் யோசித்தார்.
அவர், ஒரு படகைத் திருமண மேடையாக மாற்ற முடிவு செய்தார். அதற்காக ஒரு பெரிய படகை ரூ. 15 ஆயிரத்திற்கு வாடகைக்கு எடுத்தார். அதில் திருமணத்தை நடத்தலாம் என முடிவு செய்து மாப்பிள்ளை வீட்டாரின் சம்மதத்துடன், மிதக்கும் படகு முழுவதும் பூக்கள் அலங்கரிக்கபட்டு கோலாகலமாக மணமக்களின் திருமணம் நடத்தியிருக்கிறார்.
மேலும், இந்த திருமணத்தில் மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்குட்பட்டு கலந்து கொண்டனர்.
மகளின் திருமணம் தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தந்தை செய்த இச்செயல் அப்பகுதியில் உள்ளவர்கள் வியப்படைந்து, பாராட்டு தெரிவித்தனர்.
தற்போது இத்திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.