சென்னை மருத்துவமனையில் மாயமான பெண் - அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

tamilnadu-samugam
By Nandhini Jun 09, 2021 08:00 AM GMT
Report

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட பெண் திடீரென காணாமல் போனார். ஒரு வாரத்திற்கு பின்னர் அதே மருத்துவமனை வளாகத்தில் அழுகிய நிலையில் அவர் உடல் மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் மவுலி. இவருடைய மனைவி சுதா. மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி சிகிச்சைக்காக மவுலி சேர்த்தார்.

3-வது மாடியில் சுதா சிகிச்சை பெற்று வந்துள்ளார். சுதாவுக்கு அன்று இரவு உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பினார் மவுலி, மறுநாள் சுதாவைப் பார்க்க மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளார் மவுலி. ஆனால், அப்போது 3-வது வார்டில் மனைவி சுதா இல்லை. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் மவுலி. மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார். நிர்வாகத்தினர் சுதாவைத் தேடிப் பார்த்துவிட்டு காணவில்லை என்று கூறினர். அதனையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் மவுலி புகார் கொடுத்தார்.

இதனையடுத்து, காவல்நிலையத்திற்கு சென்று ஏன் என் மனைவியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று மவுலி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மவுலியை அழைத்துக்கொண்டு, மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீசார் தீவிரமாக தேடினர். மருத்துவமனையின் 8-வது மாடியில் சுதாவின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதைப் பார்த்ததும் மவுலி கதறி அழுதார்.

சென்னை மருத்துவமனையில் மாயமான பெண் - அழுகிய நிலையில் சடலம் மீட்பு! | Tamilnadu Samugam

புகார் கொடுத்த அன்றே தேடியிருந்தால், மனைவி உயிருடன் கிடைத்திருப்பார் என்று போலீசாரிடம் கதறினார். சுதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது கணவர் மவுலி குற்றம்சாட்டினார்.

உடனே, இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொரோனா நோயாளிகளை கவனிப்பதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் இருந்தும் அவர் எப்படி மாயமானார்? 3-வது மாடியில் இருந்த சுதா 8-வது மாடிக்கு எப்படி சென்றார். ஏன் இறந்து கிடந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.