கோவை அருகே 6-வது மாடியிலிருந்து பெண் மருத்துவர் தவறி விழுந்து பலி!
கோவை சிங்காநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது மாடியில் இருந்து பெண் மருத்துவர் ஒருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ராம்குமார். இவரது மனைவி வத்சலாதேவி (56). இவர் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். சில வருடங்களுக்கு முன்பு தான் இவர் விருப்ப ஓய்வுபெற்றார்.
இந்நிலையில், வத்சலாவுக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். நேற்று 6-வது மாடியில் உள்ள தனது வீட்டில் வத்சலா துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு திடீரென்று வலிப்பு நோய் ஏற்பட்டது. இந்த வலிப்பு நோயால் 6-வது மாடியிலிருந்து அவர் தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த வத்சலா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது, வத்சலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.