அடுக்கடுக்காக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு - உற்சாகத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள்!
மதுரையைச் சேர்ந்த இரு பெண்கள், நட்புடன் பழகி வந்தனர். பின்னர், அந்த நட்பு காதலாக மாறியது. பிரிந்து போக மனமில்லாமல் சேர்ந்து வாழ ஆசைப்பட்டனர்.
இதற்கு இருவர் வீட்டிலும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோர்கள் பிரிக்க முயற்சி செய்ததால், இருவரும் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வேலை தேடினர்.
இதனையடுத்து, இருவரையும் காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்தப் புகாரை பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
இரு பெண்களின் பெற்றோருக்கும் கவுன்சிலிங் கொடுக்க உத்தரவிட்டார். இதில் இருவரின் பெற்றோரும் பெண்களின் உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இறுதியாக, இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும், கவுன்சிலிங்கில் பங்கேற்றார். இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
அவர் பிறப்பித்த உத்தரவு அறிக்கை வருமாறு -
ஆணோ, பெண்ணோ மாயமானதாக புகார் வந்தால் அதுகுறித்த விசாரணையில் அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என கண்டறியப்பட்டால், அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின் காவல் துறையினர் வழக்கை முடித்து, எந்தவித துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்காமல் அவர்களை விடுவிக்க வேண்டும்.
ஓரினச்சேர்க்கையாளர்களை கையாள்வதில் திறமை வாய்ந்த தொண்டு நிறுவனங்களின் பட்டியலை எட்டு வாரங்களில் வெளியிட வேண்டும்.
அவர்களுக்கு தேவையான நிதி சட்ட உதவிகளை மத்திய சமூக நீதித்துறை வழங்க வேண்டும்.
ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்குமிடம் போதுமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் 12 வாரங்களில் ஏற்படுத்த வேண்டும்.
போலீஸ், சிறைத்துறை, நீதித்துறை, கல்வித்துறைகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சிறைகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மீது பாலியல் தாக்குதல் நடைபெறாமல் தடுக்க அவர்களை தனியாக அடைக்க வேண்டும்.
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பாலின மாற்று சிகிச்சை வழங்க தடை விதிக்க வேண்டும்.
அச்செயலில் ஈடுபடும் மருத்துவர்களின் உரிமங்களை திரும்பப் பெற வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் ஆண், பெண் தவிர்த்து பாலின நடுநிலையாளர்களுக்கு என தனி கழிப்பறைகளை ஏற்படுத்த வேண்டும்.
மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் கல்வி ஆவணங்களில் பெயர், பாலின மாற்றம் செய்ய அனுமதிக்கும் வகையில் கொள்கைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
மாணவர் சேர்க்கை, நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வு விண்ணப்பங்களில், ஆண், பெண் மட்டுமல்லாமல் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பகுதியையும் சேர்க்க வேண்டும்.
இந்த உத்தரவுகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவு அறிக்கையில் குறிப்பிட்டார்.