என் பணம் 2 பேருக்கு உதவட்டும்ப்பா... இத முதல்வரிடம் கொடுங்க - ஊனமுற்ற பாட்டி கொடுத்த நன்கொடை!
ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய, கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்கள்.
இந்த சிறப்பு சிகிச்சை மையத்தில் 50 படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 25 படுக்கை வசதியுடன் மொத்தம் 75 படுக்கைகள் உள்ளன.
அமைச்சர்கள் வந்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த அருக்காணி என்ற உடல் ஊனமுற்ற பாட்டி, இவர் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருந்த ரூ.1500த்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கும்படி நன்கொடையாக அமைச்சர்களிடம் கொடுத்தார்.
அப்போது அந்த பாட்டியிடம், விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உங்கள் சார்பாக ரூ.1500 பணத்தை நானே முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்துவிடுவேன். இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் பாட்டி என்று கூறியுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பாட்டி, இல்லையப்பா... என்னுடைய சேமிப்பில் சேர்த்த பணத்தை யாராவது இரண்டு நபர்களுக்கு பயன்படட்டும் என்று கூறினார்.
பாட்டி கூறியதைக் கேட்ட அங்கிருந்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள். தள்ளாத வயதில், உடல் ஊனமுற்ற அருக்காணி பாட்டி, பனியன் வேஸ்டி நூல் பிரிக்கும் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இவர், தான் சேர்த்து வைத்திருந்த 1500 ரூபாய் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்தை அமைச்சர்கள் மற்றும் அனைவரும் அவரை பாராட்டினார்கள்.